காவிரி விவகாரம்: தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு – புதிய அமர்வு இன்று விசாரணை!
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் நீர் திறந்து விட கோரும் மனுவை விரைந்து விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், இதுதொடர்பாக விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வை அமைப்பதாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உறுதி அளித்தார். இதையடுத்து, காவிரி வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகிய 3 பேர் அடங்கிய புதிய அமர்வை காவிரி வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் நியமித்தது. காவிரி நதிநீர் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதியிடம் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முறையிட்டார். எனவே, காவிரி விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் இந்த அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.
இந்த வழக்கு 57 வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், வரும் 25ம் தேதி இன்று உச்சநீதிமன்றத்தில் புதிய அமிர்வு முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு விசாரணையை இன்று 3 நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வு விசாரிக்கிறது. அப்போது, கர்நாடக தரப்பு மற்றும் தமிழ்நாடு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட உள்ளன.