இன்று கோலாகலமாக உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் தொடக்கம்!
இன்று உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் தொடங்குகின்றன. இரண்டு கண்டங்களில் முதல்முறையாக நடைபெறும் போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடரை, நடப்பு ஆண்டில் ரஷ்யா முதன்முறையாக ஏற்று நடத்துகிறது. இந்த போட்டித் தொடரை நடத்த இந்திய மதிப்பில் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் செலவு பிடிக்கும்
ரஷ்யாவில் மாஸ்கோ, சோச்சி, பீட்டர்ஸ்பர்க், கஸான் உள்ளிட்ட 11 நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் மொத்தம் 64 போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் எகடெரின் பர்க் – கலினிங்கிராட் நகரங்களுக்கு இடையே உள்ள தூரம் 2424 கிலோ மீட்டர். மாஸ்கோவுக்கும், லண்டனுக்கும் இடையே உள்ள தூரமும் இதே அளவுதான். மேலும் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் 6 மைதானங்கள் ஆசிய கண்டத்திலும், மீதமுள்ள 6 மைதானங்கள் ஐரோப்பிய கண்டத்திலும் உள்ளன. இப்படி இரு கண்டங்களிலும் நடைபெறும் முதல் உலக கோப்பை போட்டி இதுதான்.
போட்டிகள் நடைபெறும் ரஷ்ய உலகக் கோப்பைத் தொடர் நடைபெறவுள்ள 12 மைதானங்களில் 9 மைதானங்கள், புதிதாகக் கட்டப்பட்டவை. உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் மைதானத்தில், குறைந்தது 35 ஆயிரம் இருக்கைகள் இருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.
இந்நிலையில் நான்கு லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ள Ekaterinburg Arena மைதானத்தில், 27 ஆயிரம் பேர்தான் அமர்ந்து போட்டியைக் காண முடியும். கேலரியைப் புதியதாகக் கட்டினால் மட்டுமே இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்ற நிலையில், தொழில்நுட்ப வல்லுநர்கள் வித்தியாசமாகச் சிந்தித்து, இரு கோல் கம்பத்துக்கும் பின் பகுதியில் கேலரிகளை புதிதாக எழுப்பினர். தற்போது, இந்த மைதானத்தில் 45 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியைக் காண முடியும்.
இப்படி கட்டுமானங்களிலும் புதுமையை கொண்டுள்ளது இந்த கால்பந்து தொடர். உலகக் கோப்பை போட்டியைக் காண ரஷ்யா செல்பவர்களுக்கு விசா தேவையில்லை என்றும் போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு, Fan-ID ரஷ்ய அரசால் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு போட்டித் தொடரில் இத்தாலி, நெதர்லாந்து போன்ற பலம் வாய்ந்த அணிகள் இல்லாதது, போட்டியின் சுவாரஸ்யத்தைக் குறைக்காது என்று நம்பப்படுகிறது. எகிப்து போன்ற புதுமுக அணிகள் தங்களின் திறமையை நிரூபிக்கப் போராடும் என்ற எதிர்பார்த்து உருவாகி உள்ளது. ரஷ்ய உலகக் கோப்பையில், 45 வயது வீரர் ஒருவரும் விளையாட உள்ளார். எகிப்து அணியின் கோல்கீப்பர் எல் ஹத்ரியே அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர். கொலம்பிய கோல்கீப்பர் ஃபாரீத் மான்ட்ரெகன் 43 வயதில் உலகக் கோப்பை போட்டியில் விளையாடியதே இதற்கு முன் சாதனையாக இருந்தது.
இந்த உலகக் கோப்பைத் தொடரின் தர வரிசையில் கடைசி இடத்தில் உள்ள அணி போட்டியை நடத்தும் ரஷ்யாதான். தரவரிசையில் 65-வது இடத்தில் உள்ள ரஷ்யா, 63-வது இடத்தில் உள்ள சவுதி அரேபியாவை முதல் ஆட்டத்தில் சந்திக்கிறது. தரவரிசையில் கீழே உள்ள இரு அணிகள் தொடக்க ஆட்டத்தில் மோதுவதும் இதுவே முதல் முறையாகும். இந்த தொடக்க ஆட்டம் இந்திய நேரப்படி வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. கால்பந்து போட்டித் தொடருக்காக 25 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன.
நடப்பு போட்டித் தொடரில் முதல் முறையாக உதவி நடுவர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதே போன்று ஒவ்வொரு போட்டிகளுக்கும் மூன்று கண்காணிப்பாளர்களை சம்மேளனம் நியமித்துள்ளது. போட்டியை காணும் ரசிகர்கள் இனவெறி பிரச்சனையில் ஈடுபட்டால் ஆட்டத்தை நிறுத்தவோ, ரத்து செய்யவோ கண்காணிப்பாளர்கள் பரிந்துரைப்பார்கள்.
இந்த உலகக் கோப்பைதான் 32 அணிகளுடன் விளையாடப்படும் கடைசி தொடர். 2022-ம் ஆண்டு கத்தார் உலகக் கோப்பை முதல், 48 அணிகள் களமிறங்கப்போகின்றன. 16 அணிகளுக்குப் புதியதாக உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.