உதயநிதி ஸ்டாலினால் போட்டி தேர்வு எழுத முடியுமா.? அவருக்கு ஆலோசனை தேவை.! பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்வை கண்டித்து திமுக சார்பில் கடந்த 20ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்யுங்கள் என காட்டத்துடன் பேசி பல கேள்விகளை எழுப்பினார். இந்நிலையில், ஆளுநர் குறித்த அவரது பேச்சை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “ஆளுநரின் பதவி அரசியல் கிடையாது. தேர்தலில் நிற்காத ஒரு பதவி. 1950 இலிருந்து இருக்கக்கூடிய ஒரு பதவி. அவர்களிடம் போய் ஒரு விதண்டாவாதத்துடன் மெச்சூரிட்டி இல்லாமல் அரசு பதவியில் முக்கியமான பொறுப்பில் இருக்கக்கூடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வாருங்கள். போட்டிக்கு போட்டி பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்.”
“இதற்கு ஆளுநர் மீண்டும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஒரு போட்டி தேர்வில் தேர்ச்சி பெறுங்கள் என்று கூறினால் அது யாருக்கு அசிங்கம். அதனால் ஆளுநரின் பொறுப்பு என்னவென்று புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள். இன்றைக்கு நிட்டைப் பொறுத்த வரைக்கும் இறுதி முடிவு ஜனாதிபதி கையில் உள்ளது. ஒருவேளை ஜனாதிபதி இதனை மறுக்கிறார்கள் என்று ஒரு புறம் வைத்துக் கொள்ளலாம்”
“ஏனென்றால் ஏற்கனவே ஜனாதிபதி 2019ம் ஆண்டு நீட் குறித்த கோரிக்கையை ரத்து செய்து இருக்கிறார்கள். எனவே இப்போது இருக்கக்கூடிய ஜனாதிபதி நிட்டை ஆதரிக்க கூடிய ஆதாரம் எதுவும் இல்லை. ஒரு வேலை ஜனாதிபதி அவர்கள் ரேட்டை ரத்து செய்வதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்றால் அடுத்ததாக திமுக அவர்களையும் நீங்கள் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழகத்தில் வந்து தேர்தல் நில்லுங்கள் என்று கூறினால், ஜனாதிபதி இதைப் பார்த்து சிரிப்பார்கள்.”
“அதனால் திமுகவினுடைய இடியாப்ப சிக்கல் என்பது, அவர்களாகவே தினமும் புதுசு புதுசாக பேசி அந்த இடியாப்பத்தை இன்னும் பெருசாக ஊத்திக் கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து திமுக வெளியே வர முடியாது. இந்த வருட நீட் தேர்வு இந்த வருடத்தை விட 2025 இல் இன்னும் பிரமாதமாக இருக்கும். அதனால் இப்பவும் நான் திமுகவிடம் கேட்பது, நீட்டை வைத்து நாங்கள் அரசியல் செய்கிறோம் என்று சொல்லிவிட்டு நீங்கள் வெளியே வந்தால் விளையாட்டு முடிந்தது. எத்தனை உயிர்களை இன்னும் காவு கொடுக்கப் போகிறீர்கள்.” என்று கூறினார்.
மேலும், உதயநிதியை பொருத்தவரையில் திமுகவில் இருக்கிற பெரியவர்களிடம் கேட்டு அரசியல் கற்றுக் கொள்ள வேண்டும். மாநில தலைவராக இருக்கிறேன் என்றால் பொன்னார் அவர்களிடம் இருந்து நிறைய விஷயங்கள் கேட்டு தெரிந்து கொள்கிறேன். என்னை விட அரசியல் அனுபவம் கொண்ட அவர் என்ன பேச வேண்டும், என்ன பேசக்கூடாது என்பதை உரிமையாக என்னிடம் சொல்கிறார். அதை நான் வரவேற்கிறேன்.”
“கடந்த 22 நாட்களிலே கிட்டத்தட்ட எனக்கும் பொன்னார் அண்ணன் அவர்களுக்கும் 10 முதல் 15 ஆலோசனைகள் வரை நடந்திருக்கும். எனவே உதயநிதி ஸ்டாலினுக்கும் இதே போன்ற ஒரு ஆலோசனை தேவைப்படுகிறது. ஒரு அமைச்சராக இருந்து கொண்டு என்ன செய்ய முடியும் என்ன செய்ய கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் மீது சத்தியம் செய்துவிட்டு பொறுப்புக்கு வந்தவர்கள் ஆளுநரை பற்றி என்ன பேசலாம் என்று தெரிந்து பேச வேண்டும்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.