அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு இன்று விசாரணை!
அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த முறை விசாரணையின்போது அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 3 பேர் ஆஜராகவில்லை. செம்மண் குவாரி வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட கோபிநாத், ஜெயசந்திரன் உள்ளிட்ட 4 பேர் ஆஜராகியிருந்தனர். இதனால் வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு தொடுக்கப்பட்டது. அதாவது, 2006-2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியின்போது செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்பட்டதாக வழக்கு பதியப்பட்டது.
அதன்படி, அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது 2012ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், லோகநாதன் உடல்நலக் குறைவால் காலமானார். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.