அரசியல் பேச நான் விரும்பவில்லை! யோகிகள், சந்நியாசிகள் காலில் விழுவது எனது பழக்கம் – நடிகர் ரஜினிகாந்த்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. மேலும், இப்படத்தில் தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியான சாதனை படைத்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இதனிடையே, நாட்டில் கொரோனாவுக்கு பிறகு, ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் நேரத்தில் இமயமலை சென்ற நடிகர் ரஜினிகாந்த் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சமீபத்தில் உத்தரபிரதேசம் சென்றார். அப்போது, உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மவுரியா உடன் சேர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ஆகியோர் திரையரங்கில் ஜெயிலர் திரைப்படத்தை பார்த்தனர்.
இதனைத்தொடர்ந்து, லக்னோவில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ரஜினிகாந்த் ஆசிர்வாதம் பெற்றார். இந்த நிகழ்வு சமூக வலைதங்களில் வைரலாகி பேசும் பொருளாக மாறியது. சமூக வலைதங்களில் ரஜினி மீது பல்வேறு விமர்சங்களும் முன்வைக்கப்பட்டன. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் நடிகர் சாமி தரிசனம் செய்த நடிகர் ரஜினிகாந்த் ராணுவ முகாமுக்கு சென்று உரையாற்றினார். தனது இமாலய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இமயமலை சென்று வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெயிலர் திரைப்படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கும், என்னை வாழவைத்த தெய்வங்களாகிய தமிழ் மக்களுக்கும், உலக மக்களுக்கும் எனது நன்றி.
படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் தெரிவிப்பதாகவும் கூறினார். இதன்பின், யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, வயது குறைவானவராக இருந்தாலும் யோகிகள், சன்னியாசிகள் காலில் விழுந்து வணங்குவது என்னுடைய வழக்கம். நான் அதைத்தான் செய்தேன் என்றார். மேலும், நட்பு ரீதியாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்தேன். அரசியல் பேச நான் விரும்பவில்லை எனவும் பதிலளித்தார்.