தமிழகத்திற்கு நீர் திறக்கக் கூடாது என பாஜக போராட்டம்!
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என கர்நாடக மாநில பாஜகவினர் போராட்டம்.
கர்நாடக மாநிலம் மாண்டியாவில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று அம்மாநிலம் ஆளும் கட்சியான காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு எதிராக, பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டால், அது கர்நாடக விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்றும், தமிழக அரசுக்கு காங்கிரஸ் பணிந்து வருவதாகவும், தண்ணீர் திறப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அக்கட்சியினர் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடக விவசாயிகள் மீது அக்கறை இல்லை என்றும், தமிழக ஆளும் கட்சியான திமுகவின் நலன்களுக்காக மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் குற்றம்சாட்டினர்.
மேலும், மாண்டியாவைச் சேர்ந்த சுயேச்சை எம்.பி. சுமலதா அம்பரீஷும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, கர்நாடக விவசாயிகள் தண்ணீரின்றி தவித்து வரும் நிலையில், மற்ற மாநிலங்களுக்கு அரசு எப்படி தண்ணீர் விட முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்தப் பிரச்சினைக்கு கர்நாடக அரசு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும், கர்நாடக விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததோடு, விவசாயிகளுக்கு ஆதரவாக அரசு முடிவு எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.