நாளைக்குள் ஆஜராக முஷரப்புக்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் கெடு..!
இவ்வழக்குகள் தொடர்பான விசாரணையின்போது ஆஜராக தவறியதால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள முஷரப்புக்கு சொந்தமாக வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை முடக்கி வைக்க நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் மூலம் முஷரப்பை கைது செய்து பாகிஸ்தானுக்கு அழைத்து வருமாறு சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை நிறைவேற்ற வசதியாக பர்வேஸ் முஷரப்பின் பாஸ்போர்ட் மற்றும் பாகிஸ்தான் நாட்டு தேசிய அடையாள அட்டையை முடக்கி வைக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது.
பின்னர், அந்நாட்டு தேசிய தகவல் பதிவு மையத்தின் தலைமை அதிகாரி கேட்டுக்கொண்டதன் பேரில், முஷரப்பின் பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டை முடக்கத்தை சுப்ரீம் கோர்ட் நேற்று ரத்து செய்தது. முஷரப் நாடு திரும்ப வேண்டும், வழக்கை சந்திக்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டார்.
இதற்கிடையில், அடுத்த மாதம் 25-ம் தேதி நடைபெறும் பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் சித்ரால் தொகுதியில் போட்டியிட முஷரப் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டுக்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்யவும், வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்ளவும் வழிசெய்யும் விதத்தில் அவரது பாஸ்போர்ட் முடக்கம் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது.
இதற்கு முன்னதாக லாகூர் கோர்ட்டில் நடைபெற்றுவரும் விசாரணையில் ஜூன் 13-ம் தேதி (இன்று) முஷரப் ஆஜராக இறுதி கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று பிற்பகல் நிலவரப்படி அவர் பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை.
இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு பெஷாவர் நீதிமன்றம் தன்னை அதிபர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்த நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் முஷரப் தாக்கல் செய்திருந்த மனுவின் மீது இன்றும் தொடர்ந்து விசாரணை நடந்தது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண்ட அமர்வின் முன்னர் இன்று நடைபெற்ற விசாரணையில், முன்னாள் அதிபர் முஷரப் நாளை (வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணிக்குள் ஆஜராக வேண்டும் என இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பாகிஸ்தான் வரும் முஷரப்புக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்படும். இதை எழுத்துப்பூர்வ வாக்குறுதியாக அளிக்க முடியாது. அப்படி நாளை அவர் ஆஜராக தவறினால் சட்டப்படி அடுத்தகட்ட மேல் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தீர்மானிக்கப்படும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.