லடாக் பகுதியில் பைக்ரைடர் குழுவினரோடு பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிக்கு பைக் பயணம் மேற்கொண்டார்.
இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த 17ம் தேதி வியாழன் அன்று லடாக் பகுதிக்கு வந்தடைந்தார். தற்போது, அவரது இந்த லடாக் சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை ஆகஸ்ட் 20 ஆம் தேதி பாங்காங் ஏரியில் கொண்டாடுவார் என்று கூறப்படுகிறது.
தற்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், லடாக்கிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பைக்ரைடர் குழுவினரோடு பாங்காங் ஏரிக்கு சென்றுள்ளதாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், எங்கள் பாங்காங் ஏரிக்கு செல்லும் வழியில், என் தந்தை சொல்வார், இது உலகின் மிக அழகான இடங்களில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5, அன்று சட்டப்பிரிவு 370 மற்றும் 35 (A) நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் ஜே-கே என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, லடாக்கிற்கு ராகுல் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
மேலும், ஆகஸ்ட் 25 ஆம் தேதி 30 உறுப்பினர்களைக் கொண்ட லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் (LAHDC) கார்கில் தேர்தல் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெற உள்ள கார்கில் கவுன்சில் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.