2023 ஆசியக் கோப்பை: முதல் போட்டியை நேரில் காண பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் நடைபெற உள்ள 2023 ஆசியக் கோப்பை தொடரில் முதல் போட்டியை நேரில் காண பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. 2023 ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 30 முதல் பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்தியா – பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் பிரச்சனைக்கு மத்தியில், இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது. இந்தியா பங்கேற்கும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. வரும் 30 ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை 2023 தொடரானது வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதற்கு அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அயர்லாந்து டி20 தொடரைத் தொடர்ந்து இந்தியா ஆசியக் கோப்பை 2023 தொடரில் விளையாடுகிறது.
இதற்கான இந்திய அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. இன்னும் ஓரிரு நாட்களி ஆசிய கோப்பை 2023 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியை நேரில் காண, பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவருமான ஜெய்ஷாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். இந்த அழைப்பு ஜெய்ஷா ஏற்றாரா? அல்லது நிராகரித்தாரா என்பது குறித்த விவரம் தெரியவில்லை.
பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பையின் முதல் போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பிசிசிஐ செயலாளர் கலந்து கொள்வாரா என எதிர்பார்க்கபடுகிறது. வரும் 30ம் தேதி முல்தான் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில், நேபாளம் அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். ஷாவைத் தவிர, ACC-இன் மற்ற கிரிக்கெட் அமைப்புகளின் தலைவர்களும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.