எரிபொருள் விலையேற்றம்.. அத்யாவசிய பொருட்களின் விலையேற்றம்… போராட்டத்தில் களமிறங்கிய பாகிஸ்தான் வணிகர்கள்.!
பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக எரிசக்தி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக பாகிஸ்தான் வர்த்தகர்கள் நேற்று கராச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கராச்சி துறைமுகத்திற்கு அருகில் மேமன் மசூதிக்கு முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு வணிகர் கூட்டமைப்பினர் இந்த போராட்டத்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 வர்த்தக சங்கங்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் விலையேற்றம் தொடர்ந்தாலோ, பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தாலோ போராட்டத்தை தொடரப்போவதாகவும் வணிகர்கள் கூறியுள்ளனர்.
மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதால், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களால் தாங்க முடியாத அளவுக்கு விலையேற்றம் ஏற்பட்டுள்ளது என்று போராட்டத்தில் பங்கேற்ற வணிகர்கள் கூறினார். மேலும், அதனால்தான் வணிகத்தைப் பாதுகாக்க நாங்கள் போராட்டத்தை தொடங்கினோம். என கூறியுள்ளனர்.
வணிகர்கள் போராட்டத்தை போலவே, பாகிஸ்தான் பொதுமக்களும் அதியவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.