தேர்தலுக்காக கச்சத்தீவை கையிலெடுக்கும் திமுக.! எங்கள் மாநாடு எல்லா இடங்களிலும் எதிரொலிக்கும்.! ஜெயக்குமார் கருத்து.!

Former ADMK Minister Jayakumar

மதுரையில் நாளை அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால், மாநாட்டை பிரமாண்டமாக நடத்த உள்ளனர்.  இந்த மாநாட்டில் சுமார் 15 லட்சம் அதிமுக தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நாளை நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள், நிர்வாகிகள் பேருந்து, கார் உள்ளிட்டவற்றில் மதுரைக்கு புறப்பட தொடங்கி உள்ளனர்.

அந்தவகையில், சென்னை ராயபுரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பேருந்துகள் மூலம் இன்று காலை மதுரைக்கு பயணத்தை தொடங்கினர். இந்த பயணத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை மாநாட்டிற்காக அதிமுகவினர் குடும்பமாக மதுரை செல்கின்றனர்.

இப்படியான மாநாட்டை இதற்கு முன் யாரும் நடத்தவில்லை. எதிர்காலத்திலும் யாரும் இதுபோன்று நடத்தப்போவதில்லை என்ற வகையில் இருக்கும். கட்சியே இல்லை என்று கூறியவர்களுக்கு இந்த மாநாடு பேரிடியாக அமையும். எங்கள் மாநாடு வெளியே தெரியக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு அதே நாளில் நீட் தேர்வை மையமாக வைத்து உண்ணாவிரதத்தை திமுக நடத்துகிறது.

மேலும், அதே நாளில் (நாளை) கட்சியே இல்லாத ஓபிஎஸ் மாவட்ட செயலாளர் கூட்டத்தை கூட்டுகிறார். இறுதியில் இவர்கள்தான் குருடர்களாக இருப்பார்கள்.  எனவே, எங்கள் மாநாட்டின் தாக்கம் அனைத்து இடங்களிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற தேர்தலுக்காக கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுக்கிறது திமுக. அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் இசைவு இல்லாமல் எப்படி கச்சதீவு ஒப்பந்தம் போட முடியும் என்றும் கச்சத்தீவை தாரைவார்க்கும்போது கருணாநிதி தூங்கிக்கொண்டிருந்தாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். கச்சத்தீவு மீட்கப்படும் என தேர்தல் நேரத்தில் பேசி மீனவர்களை திமுக ஏமாற்றுகிறது எனவும் விமர்சித்துள்ளார்.

கச்சத்தீவு விவகாரத்தில் பேசுவதற்கு திமுகவுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. 17 ஆண்டுகள் மத்திய அரசில் இருந்த திமுக ஏன் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போதைய மத்திய அரசு சார்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் 2 முறை பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதாகவும் குற்றசாட்டியுள்ளார்.

மேலும், கட்சத்தீவை தாரைவார்த்து விட்டு, இப்போது அதுபற்றி திமுக பேசுவதால் ஒரு பயனுமில்லை. கச்சத்தீவு, காவிரி ஆறு குறித்து பேசினால் திமுக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துவிடும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார் எனவும் ஜெயக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ராமநாதபுரத்தில் நடந்தது மீனவர்கள் நல மாநாடு அல்ல, மீனவர்கள் அந்த மாநாட்டை புறக்கணித்துவிட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்