அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் உடனடியாக ரத்து செய்க – பாமக

Anbumani Ramadoss

நீட், ஐஐடி, ஜேஇஇ உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில், தற்கொலைகளை தடுப்பதை விட அதற்கான காரணங்களை அகற்றுவதே சிறந்தது. நீட், ஐஐடி, ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதில் புகழ்பெற்ற இராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள விடுதிகளில், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க அங்குள்ள மின்விசிறிகளில் ஸ்பிரிங்குகளும், அபாய ஒலி எழுப்பும் கருவிகளும் பொருத்தப்படுவதை நகர நிர்வாகம் கட்டாயமாக்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் வேதனை அளிக்கின்றன.

ஆனால், எய்தவன் இருக்க அம்பை நொந்த கதையாக, மாணவர்களின் தற்கொலைகளுக்கான காரணங்களை கண்டறிந்து அகற்றாமல், தற்கொலைகளை மட்டும் தடுக்க நினைப்பது முழுமையாக தீர்வை வழங்காது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரம் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சிக்கு பெயர் பெற்றது ஆகும். அந்த நகரில் நீட், ஐஐடி, ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கு 40 ஆயிரத்திற்கும் கூடுதலானவர்கள் பயிற்சி பெறுகின்றனர். அவர்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள விடுதிகளில் தங்கி பயிற்சி பெறுகின்றனர். நுழைவுத்தேர்வுக்கு தயாராக முடியாதவர்களும், தேர்வில் தோல்வியடைந்தவர்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

கடந்த ஆண்டில் 15 பேரும், நடப்பாண்டில் இதுவரை 20 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதைத் தடுப்பதற்காகவே இந்த ஏற்பாட்டை கோட்டா நிர்வாகம் செய்திருக்கிறது. நுழைவுத்தேர்வு பயிற்சிக்காக ஒவ்வொரு மாணவனும் ரூ.20 லட்சம் வரை செலவழிக்க வேண்டியுள்ளது. இது எல்லா குடும்பங்களுக்கும் சாத்தியம் அல்ல. ரூ.20 லட்சம் செலவழித்த பிறகும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத போது தான், தற்கொலை எண்ணம் தலைதூக்குகிறது. இதிலிருந்து மாணவர்களைக் காக்க நீட், ஐஐடி, ஜேஇஇ உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் உடனடியாக செய்ய ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்