ஆளில்லா விமானம் மூலம் மாஸ்கோவை தாக்கிய உக்ரைன்!
உக்ரைன் ஆளில்லா விமானம் மூலம் மாஸ்கோவில் உள்ள கட்டிடத்தின் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், நகரின் வான்வெளி மூடப்பட்டதால், சிவில் விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து சீர்குலைந்துள்ளது.
இந்த தாக்குதல் இன்று அதிகாலை 4 மணியளவில் நடந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் டெலிகிராமில் தெரிவித்துள்ளது. பின்னர், ரஷ்யாவின் வான் பாதுகாப்பு படையினர், தாக்குதல் நடத்திய ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் கூறியுள்ளார்.
இதனையடுத்து, இந்த தாக்குதல் தொடர்பாக புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவிவருகிறது. மேலும், இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் ஏதும் இல்லை.