மக்களே இன்று உங்களது போனில் இந்த எச்சரிக்கை சத்தம் வந்தது..?
இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை, செல் ஒலிபரப்பு அமைப்பு மூலம் பல ஸ்மார்ட்போன்களில் ஃபிளாஷ் உடன் தங்களது ஃபோன்களில் உரத்த பீப் சத்தத்துடன் ஒலி எழுப்பப்பட்டது. இது இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை மூலம் செல் ஒலிபரப்பு அமைப்பு மூலம் அனுப்பப்பட்ட மாதிரி சோதனைச் செய்தி என கூறப்படுகிறது.
இந்தச் செய்தி TEST Pan-India Emergency Alert System க்கு அனுப்பப்பட்டது. இந்த ஒலியானது, பொது பாதுகாப்பை மேம்படுத்துவதையும், அவசர காலங்களில் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதையும் நோக்கமாக கொண்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று மதியம் 1.35 மணிக்கு அனைத்து ஆண்ட்ராய்டு போன்களிலும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு துறையின் செல் ஒளிபரப்பு அமைப்பு இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள குறுஞ்செய்தியில், மொபைல் ஆபரேட்டர்கள் மற்றும் செல் ஒளிபரப்பு அமைப்புகளின் அவசர எச்சரிக்கை ஒளிபரப்பு திறன்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு இதுபோன்ற சோதனைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து அரசு செயல்பட்டு வரும் நிலையில், நிலநடுக்கம், சுனாமி மற்றும் திடீர் வெள்ளம் போன்ற பேரிடர்களுக்கு சிறப்பாக தயாராக இருக்க இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.