மதுரை மாநகரில் சட்டம், ஒழுங்கை பாதுகாப்பேன் – புதிய போலீஸ் கமிஷனர் பேட்டி..!
மதுரை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் மாற்றம் செய்யப்பட்டு, புதிய கமிஷனராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார். அவர் இன்று மதுரை வந்து பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், 1995-ம் ஆண்டு ஐ.பி.எஸ். முடித்து தர்மபுரி மாவட்டத்தில் உதவி சூப்பிரண்டாக பணியில் சேர்ந்தேன். அதன் பிறகு பரமக்குடியில் பணியாற்றினேன். 2004-ம் ஆண்டு மதுரையில் துணை கமிஷனராக பணிபுரிந்துள்ளேன்.
தற்போது கமிஷனராக பொறுப்பேற்றுள்ள நான், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முக்கியத்துவம் கொடுப்பேன். குற்ற நிகழ்வுகளை தடுக்க தினமும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும்.
மக்கள் தொகைக்கு ஏற்றவாறு போலீசார் எண்ணிக்கை இல்லை. எனவே மக்களோடு இணைந்து பணியாற்றும் வகையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு குற்றங்களை தடுப்பேன்.
ஏற்கனவே மதுரை மாநகர காவல்துறையில் பல்வேறு திட்டங்கள் உள்ளன. சட்டம்-ஒழுங்குக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
மக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்க்கப்படும். மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். ஒரு வழிப்பாதை, ஷேர் ஆட்டோ செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். காவல் துறையினரின் விடுமுறை ஓய்வுக்கு முக்கியத்துவம் அளிப்பேன் என்றார்.
இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா முதலூர் ஆகும்.