அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை!
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் (54) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்த்திபன் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டதாகவும், அவரது உடலை கைப்பற்றிய காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தனது வீட்டின் அருகில் உள்ள மைதானத்தில் பார்த்திபன் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது 2 சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரிமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பார்த்திபனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அப்பகுதி மக்கள் கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது பார்த்திபனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சமைத்து இடத்துக்கு வந்த காவல்துறை பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். மேலும், பார்த்திபன் செம்மரம் கடத்தல் வழக்கில் ஆந்திர காவல்துறையால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.