லிபியாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல்! 27 பேர் உயிரிழப்பு..106 பேர் காயம்1
லிபிய தலைநகர் திரிபோலியில் ஆயுதமேந்திய இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. லிபியாவில் 444 படைப்பிரிவின் தளபதி மஹ்மூத் ஹம்சா, தலைநகர் திரிபோலியின் முக்கிய மிட்டிகா விமான நிலையம் வழியாக பயணிக்க முயன்றபோது தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து, இரு பிரிவினருக்கு இடையே மோதல் தொடங்கியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், 444 படைப்பிரிவின் தளபதி மஹ்மூத் ஹம்சாவை சிறப்புத் தடுப்புப் படை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் வெளியாகவில்லை. மேலும், மஹ்மூத் ஹம்சாவை நடுநிலை கட்சிக்கு (neutral party) மாற்ற, ஐ.நா.அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஒற்றுமை அரசாங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து இருபிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் நிறுத்தப்பட்டன.
இந்த ஒப்பந்தம், திரிப்போலியில் அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துதல், இராணுவப் பிரிவுகளை அவற்றின் முகாம்களுக்குத் திரும்புதல், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்தல் மற்றும் தேசிய ஒற்றுமை அரசாங்கம் இழப்பீடுகளை வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களில் பொதுமக்களும் இருந்ததாக தெரிவிக்கின்றன. ஒரே இரவில் நடந்த இந்த மோதல் இந்த ஆண்டின் மிக கடுமையான மோதலாக கருதப்படுகிறது.