சாதி என்பதை ஓர் அடையாளம் என்ற அளவில் கருதினால் போதும்.! வைரமுத்து கண்டனம்.!
சென்னை பெசன்ட் நகரில் விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து கலந்துகொண்டார்.
விழா முடிந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாடலாசிரியர் வைரமுத்து, நாங்குநேரியில் பள்ளி மாணவனை சாதிய பாகுபாடு காரணமாக சக மாணவர்கள் வீடு புகுந்து மாணவனையும், அவரது தங்கையையும் வெட்டிய சம்பவம் பற்றி பேசினார்.
அவர் கூறுகையில், சாதியை வெறும் அடையாளமாக கருதினால் மட்டுமே போதும். அதனை குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டாம். சாதி என்கின்ற மாய பேய் ரத்தம் கேட்கின்றது. இருட்டினிலே உள்ளதடா உலகம். செயற்கை மனிதன் செவ்வாய் கிரக தரையில் ஆடுகையில், இங்கு இயற்கை மனிதன் சாதி சண்டையில் இடுப்பு முறிவது போல நடக்கிறது சம்பவம்.
முன்னே வள்ளுவன், பின்னே பாரதி முழங்கினார்கள் ஊருக்கு… அட இன்னும் நீங்கள் திருந்தாவிட்டால், இலக்கியம் எதற்கு.? என்று நாங்கள் சலித்து கொள்கிறோம்.
நாட்டு தலைவர்கள் பாடுபட்டதெல்லாம் வீணாகி போய்விடுமோ என வெம்புகிறோம். பிஞ்சு மனங்களில் நஞ்சு கலக்க கூடாது. அடித்தட்டு மக்களின் மனதில் நாம் சாதி எனும் பாகுபாட்டை விதைக்க கூடாது.
கல்வி கூடங்கள் சாதிகளை ஒழிக்க பிறந்த மன மருத்துவ நிலையங்கள். அந்த நிலையங்களிலேயே சாதி தலை தூக்குவதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.