சோகம்…! தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் விபத்தினால் 9 பேர் பலி!
தமிழ்நாட்டில் இன்று 4 வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உவரி கடலில் குளித்துக்கொண்டிருந்த 3 பள்ளி மாணவர்கள் நேற்று மாயமான நிலையில், இன்று உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உவரி கடலில் நேற்று குளிக்க சென்ற போது, மாயமான ஆகாஷ், ராகுல், முகேஷ் ஆகியோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்த நிலையில், மூன்று பேரின் உடல்களும் இன்று கரை ஒதுங்கின. ஒரே நேரத்தில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்த கார் மதுராந்தகம் அருகே, நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் லாரி மீது பைக் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். இது போக, சமயபுரம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.