மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.25 கோடி.. பொருட்களை விற்க மதி எக்ஸ்பிரஸ் வாகனம் – முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழகத்தில் மத்திய அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தின் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது.
முதலமைச்சரை தலைவராக கொண்ட குழுவில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர், தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் செங்கோட்டையன், எழிலன் மற்றும் நவாஸ் கனி எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் 10,000 சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 10,000 சுய உதவிக் குழுவினருக்கு சுழல் நிதி வழங்க ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுய உதவி குழுக்களுக்கு இந்தாண்டில் ரூ.25,000 கோடி நிதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
கடந்த 2 ஆண்டுகளில் சுய உதவி குழுக்களுக்கு அதிக வங்கி கடன் வழங்கி சாதனை படைத்துள்ளோம். மகளிர் சுய உதவி குழுக்களால் தயாரிக்கப்படும் பொருட்களை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய மதி என்ற எக்ஸ்பிரஸ் வாகனங்கள் வழங்கப்படும். 3,000 கிராம ஒழிப்பு சங்கங்களுக்கு வறுமை குறைப்பு நிதியாக ரூ.7.5 கோடி நிதி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றுள்ளார்.
மேலும் முதல்வர் கூறுகையில், ஒவ்வொரு ஆட்சியர்கள் அலுவலங்களிலும் சுய உதவி குழுக்கள் நடத்தும் உணவகங்கள் செயல்படுத்தப்படுகின்றன. முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அதில் சுய உதவிக்குழுக்களின் பங்கேற்பு ஏற்படுத்தப்படும். திட்டங்களை கண்காணித்தால் தான் அது தொடர்ந்து தொய்வின்றி நடைபெறும். நன்றே செய் அதனை இன்றே செய் எனும் வகையில், அனைத்து மக்களுக்கும் நன்மை தரும் திட்டத்தை சிறிதும் தாமதம் இன்றி செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.