இந்த மாநிலத்தில் சுதந்திர தின கலாச்சார நிகழ்வுகள் நிறுத்தம்..! என்ன காரணம் தெரியுமா..?
ஹிமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் பெய்து வந்த அதீத கனமழையால், சிம்லாவில் சம்மர் ஹில் பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளபாதிப்பால் அந்த மாநிலத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், ஹிமாச்சலில் மழையால் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் கருத்தில் கொண்டு சுதந்திர தின விழாக்களில் நடைபெறவிருந்த அனைத்து கலாச்சார நிகழ்ச்சிகளும் நிறுத்தப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறுகையில், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும், சோலன், சிம்லா, மண்டி மற்றும் ஹமிர்பூர் ஆகிய மாவட்டங்கள் மாநிலத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் முடிந்த அளவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.