நீட் மரணங்களுக்கு மத்திய அரசும், ஆளுநர் ரவியும்தான் பொறுப்பு – கே.பாலகிருஷ்ணன் பேட்டி
நீட் தேர்வால் ஏற்படும் மரணங்களுக்கு மத்திய அரசும், ஆளுநர் ரவியும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று சென்னையில் செல்வசேகர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், நீட் தேர்வு தோல்வியால் மகனை தொடர்ந்து தந்தையும் உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த உயிர் பலிக்கு அடிப்படையான காரணமே மத்திய இருக்கும் பாஜக அரசு நீட் தேர்வை திணித்திருப்பதுதான்.
குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் ஆளுநர் இரண்டு நாட்கள் முன்னதாக கூட நான் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கமாட்டேன் என்று கூறியிருக்கிறார். இதுபோன்ற ஆளுநரின் அடாவடித்தனம் தான் தமிழகத்தில் அதிகமான உயிர் பலிகள் ஏற்படுவதற்கு அடிப்படை காரணமாகும். எனவே, மதசார்பற்ற கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராடுகிறன்ற, போராட்டத்தின் விளைவாகத்தான் இந்த நீட் தேர்வை அப்புறப்படுத்த முடியுமே தவிர, இந்த தற்கொலைகள் அதற்கு தீர்வாக அமையாது.
இருந்தாலும், என்னை பொறுத்தவரையில் இதை தற்கொலையாக நான் பார்க்கவில்லை, ஆளுநரின் அடாவடித்தனத்தால், நீட் தேர்வினால் நடத்தப்பட்டிருக்கிற ஒரு படுகொலை என்பதாக தான் பார்க்கிறேன். இந்த உயிர் பலிகளுக்கு முழுக்க முழுக்க ஆளுநர் ரவியும், மத்திய அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்வு தோல்வியால் அதிகம் பணம் கொடுத்தும் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலையில் தான் மாணவர் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
இதையெல்லாம் பார்க்கும்போது மத்தியில் பாஜக அரசும், ஆளுநரும் சொல்வது உண்மைக்கு மாறானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவ பாதுகாப்பிற்கும், ஊழல் முறைகேடுகளை தவிர்ப்பதற்கு தான் நீட் தேர்வு என்று பாஜக அரசும், ஆளுநரும் கூறி வருகிறார்கள். ஆனால், இந்த சம்பவத்தை பார்க்கும்போது உண்மைக்கு புறமானது என தெரிய வருகிறது. பயிற்சி மையங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும், அதிலும் மதிப்பெண் பெறாவிட்டால் மருத்துவ கல்லூரிக்கு லட்சக்கணக்கான பணம் கட்ட வேண்டும் என்ற வணிகவியலுக்கு தான் நீட் தேர்வு உதவி செய்கிறது எனவும் கூறியுள்ளார்.