விரைவில் அரசியல் மாற்றம்! கையெழுத்து போட மாட்டேன் என்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள் – முதலமைச்சர்
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், நேற்று முன்தினம் ’எண்ணித் துணிக’ என்ற தலைப்பில், நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது பேசிய ஆளுநர், நீட் தேர்வுக்கு தடை கோருவதை ஒருபோதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திடமாட்டேன். இந்த விவகாரம் பொதுப் பட்டியலில் இருப்பதால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
நீட் தேர்வைப் பொறுத்தவரை, பயிற்சி மையங்களுக்குச் சென்றுதான், அதில் வெற்றிபெற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. பள்ளியில் படிக்கும்போதே, ஆழமாக கவனித்துப் படித்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம் எனவும் மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திடமாட்டேன் ஆளுநர் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சமயத்தில், சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வால் மாணவன் நேற்று தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்று தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று மகனின் இறுதி சடங்கு முடிந்த நிலையில் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ண்டார். இந்த சம்பவம் தமிழக்தில் சோகத்தையும், அதிருச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நீட் தேர்வால் மாணவன், தந்தை உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் ஆகிய இருவரது மரணமே, நீட் பலிபீடத்தின் இறுதி மரணமாக இருக்கட்டும். மாணவ கண்மணிகளே, தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.
உயிரை மாய்த்து கொள்ளும் சிந்தனை வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளார். மேலும், முதலமைச்சரின் இந்த அறிக்கையில் ஆளுநர் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் இடம்பெற்றுள்ளது. அதாவது, நீட் தேர்வு குறித்து ஆளுநரிடம் சேலம் மாணவி ஒருவரின் தந்தை கேள்வி கேட்டதற்கு, அவரால் பதிலளிக்க முடியவில்லை, நீட் விலக்கு மசோதாவுக்கு மையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் சொல்லி இருப்பது அவரது அறியாமை என தெரிகிறது.
அவரது கையெழுத்திக்காக இந்த மசோதா காத்திருக்கவில்லை, இந்த சட்டத்தை பொறுத்தவரை அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை, ஏதோ அதிகாரம் இருப்பதை போல் அவர் காற்றில் கம்பு சுற்றிகொண்டியிருக்கிறார். ஜெகதீஸ்வரன் போன்ற எத்தனை உயிர்கள் பலியானாலும், ஆளுநர் ஆர்என் ரவி போன்றவர்களின் இதயம் கரைய போவதில்லை. இப்படிப்பட்ட கல்மனசுக்காரர்களின் காலத்தில் மனித உயிர்களுக்கு மதிப்பில்லை.
எனவே, இன்னும் சில மாதங்களில் நாங்கள் ஏற்படுத்த நினைக்கும் அரசியல் மாற்றம் நடக்கும்போது, நீட் தடுப்பு சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும். கையெழுத்துபோடமாட்டேன் என்பவர்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள் என்றுள்ளார். மேலும், மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் ஆகிய இருவரது மறைவிற்கு எனது ஆழமான அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் முதலமைச்சர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
“மாணவக் கண்மணிகளே, தன்னம்பிக்கை கொள்ளுங்கள். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம்” – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை #CMMKSTALIN #TNDIPR@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/HYgUIfCnqA
— TN DIPR (@TNDIPRNEWS) August 14, 2023