கார்-பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து.! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி.!
ராஜஸ்தான் மாநிலம் பந்தாடி கிராமத்தில் நேற்று மாலை பேருந்து மற்றும் கார் மோதி பயங்கரமான விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் மற்றும் ஒரு குழந்தை உட்பட இருவர் பலத்த காயமடைந்தனர்.
சிகாரில் இருந்து கார் வந்து கொண்டிருந்தபோது, பந்தாடி கிராமத்தின் டிட்ரி சௌராஹா என்ற இடத்தில் ஒரு திருப்பத்தில் பேருந்து மீது மோதியது. இதில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஒரு குழந்தை உட்பட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “சிகாரில் இருந்து ஒரு வேன் 9 பேருடன் சென்று கொண்டிருந்தது. சாலையில் ஒரு கூர்மையான திருப்பம் இருந்தது. இதன் காரணமாக டிரைவர்கள் மற்ற வாகனத்தை பார்க்காமல் ஒருவருக்கொருவர் மோதியிருக்கலாம். விசாரணைக்குப் பிறகு மற்ற விவரங்கள் அறிவிக்கப்படும்” எனக் கூறினர்.
மேலும், இந்த விபத்தில் இறந்தவர்கள் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் சிகாரிலிருந்து நாகௌருக்கு ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.