நாடாளுமன்றத்தை ஜோக் சொல்லி சிரிக்க வைக்கும் இடமாக மாற்றி விட்டார் பிரதமர் – ராகுல் கடும் விமர்சனம்
ஜூலை 20ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. அதன்படி இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த 17 நாட்களில் எதிர்க்கட்சிகள் அமளி, சஸ்பெண்ட், நம்பிக்கையில்லா தீர்மானம், ராகுல் உரை, பிரதமர் மோடி உரை, பல்வேறு புதிய மசோதாக்கள் தாக்கல் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மணிப்பூர் குறித்து நேற்று மக்களவையில் 2 நிமிடங்கள் மட்டுமே பிரதமர் மோடி பேசினார். மணிப்பூர் விவகாரத்தை பிரதமர் மோடி நகைப்புக்குரியதாக கருதக் கூடாது. மக்களவையில் பிரதமர் இரண்டு மணி நேரம் பேசியதில் பெரும்பாலானவை ஜோக்குக்குகள்தான்.
மணிப்பூர் போன்ற தீவிரமான விஷயத்தை நகைச்சுவையான விஷயமாக பிரதமர் எடுத்துக் கொண்டுள்ளார். நாடாளுமன்றத்தை ஜோக் சொல்லி சிரிக்க வைக்கும் இடமாக பிரதமர் மாற்றி விட்டார். அவர் நகைச்சுவை செய்ய அதை சுற்றி இருப்பவர்கள் கைதட்டி சிரிக்க நகைச்சுவை மண்டபமாக மாறி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று மக்களவையில் நடந்து கொண்டது “Nonsense” என்றும் மக்களவையில் பிரதமர் மோடி சிரித்துக் கொண்டிருக்கிறார் எனவும் கடுமையாக விமர்சித்தார்.
மேலும் ராகுல் கூறுகையில், நாடாளுமன்றத்தில் நாங்கள் மணிப்பூர் குறித்து கேள்வி எழுப்பினோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. மணிப்பூரில் நிலவரம் அரசின் கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பதுதான் தற்போதைய சூழல். இந்திய ராணுவத்தை அனுமதித்து இருந்தால் மணிப்பூரில் அமைதியான சூழல் ஏற்பட்டிருக்கும். பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால், நான் அதனை வெளிப்படையாக சொல்ல மாட்டேன் என்றார். மணிப்பூர் பற்றியெரியும் சூழலில் அதை மறந்தது போல் பிரதமர் பேசியுள்ளார். பாரதமாதா என்ற வார்த்தை மக்களவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது ஆச்சிரியமளிக்கிறது.
வரலாற்றில் முதல் முறையாக பாரதமாதா என்ற வார்த்தை அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கான கடமை என்ன என்பதே நரேந்திர மோடிக்கு தெரியவில்லை. தீவிரமான ஒரு விஷயத்தை எந்த ஒரு பிரதமரும் இப்படி கையாண்டுள்ளனரா என்பதும் தெரியவில்லை. அதுவும் ஒரு பிரதமர் இவ்வளவு மோசமாக நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டதை பார்த்ததில்லை. குறைந்தபட்சம் பிரதமர் மோடி மணிப்பூருக்கு சென்றிருக்க வேண்டும்.
ஆனால், அங்கு செல்வதற்காக அறிகுறிகள் கூட தெரியவில்லை. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பல வாய்ப்புகள் இருந்தும் பிரதமர் அதை பயன்படுத்தவில்லை. அதுவும் மணிப்பூர் செல்லாமலே அதை பற்றி பேசுவது எப்படி எனவும் கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி கட்டாயம் மணிப்பூருக்கு செல்ல வேண்டும். இந்தியா என்ற அடிப்படை மணிப்பூரில் கொள்ளப்பட்டுள்ளது என்று நான் கூறியது உண்மைதான். எனவே, நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியா என்ற கருத்தியலை பாஜக கொலை செய்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மணிப்பூரில் நடக்கும் கலவரத்தை நிறுத்துவதுதான் எங்களது லட்சியம் என்றும் அதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம் எனவும் கூறியுள்ளார்.