I.N.D.I.A கூட்டணி பெயருக்கு தடை.? உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு.!
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் , திமுக , திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, விசிக உள்ளிட்ட 26 கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா எனும் கூட்டணி பெயரில் செயல்பட்டு வருகின்றனர். இந்தியா என்பதற்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (I.N.D.I.A – Indian National Developmental Inclusive Alliance) எனும் பெயர் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா (I.N.D.I.A) எனும் பெயரை கூட்டணிக்கு வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் அமர்வு முன்பு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் இருந்து, வரவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியினர் தங்கள் கூட்டணிக்கு “இந்தியா ” என பெயர் வைத்துள்ளனர். அது இந்தியாவுக்கு எதிராக பாஜக போராடும் என்று பொது மக்கள் மனதில் ஒரு தவறான எண்ணத்தை உருவாக்கும்.என்றும்,
அரசியல் ஆதாயத்திற்காக மக்களிடம் இதுபோன்ற ஓர் உணர்வை எதிர்கட்சிகள் உட்புகுத்தி மக்களை குழப்பும் முயற்சி எனவும், எதிர்கட்சிகளின் இந்த செயல் அரசியல் நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது. தனிப்பட்ட அரசியல் லாபத்துக்காக தேசத்தின் பெயர் பயன்படுத்தப்படுகிறது. என்றும், சின்னங்கள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாடு தடுப்பு) சட்டம் 1950இன் படி, “இந்தியா” என்ற பெயரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் வாதிட்டார்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி கவுல், நீங்கள் யார், உங்கள் நோக்கம் என்ன? தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டால் தேர்தல் ஆணையத்திற்கு செல்லவும். உங்களுக்கு விளம்பரம் கிடைக்க நீதிமன்றம் தான் வேண்டுமா? என்றும், அரசியலில் நாங்கள் ஒழுக்கத்தை தீர்மானிக்கப் போவதில்லை. என்றும், மக்கள் நேரத்தை விளம்பரத்திற்காக வீணடிப்பது வருத்தமளிக்கிறது என்றும் நீதிபதி கவுல் குறிப்பிட்டு வழக்கை விசாரிக்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்துள்ளார்.