பொறியியல் மாணவர் சேர்க்கை – 2ம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது!
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு 3 மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது. கடந்த மே 15 முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு நடைபெற்றது. பின்னர் இதற்கான ரேண்டம் எண் மற்றும் தர வரிசை பட்டியல் அடுத்தடுத்து வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து பொறியியல் கலந்தாய்வுக்கான தேதியை அமைச்சர் பொன்முடி கடந்த மாதம் வெளியிட்டார்.
அப்போது, தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு 3 மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, சிறப்பு பிரிவினருக்கு ஜூலை 22-ஆம் தேதி முதல் ஜூலை 26-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜூலை 28-ஆம் தேதி பொதுப்பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.
இந்த நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு நேற்று நிறைவடைந்த நிலையில், இன்று 2 ஆம் கட்ட கலந்தாய்வு தொடங்கியுள்ளது. www.tneaonline.org என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் தங்கள் விருப்பமான கல்லூரி மற்றும் பொறியியல் படிப்புகளை தேர்வு செய்யலாம். மேலும், 176.99 கட் ஆஃப் முதல் 142 கட் ஆஃப் வரை உள்ள மாணவர்கள் 2ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர்.
7.5% அரசு ஒதுக்கீட்டில் சேரவுள்ள 7,511 மாணவர்களும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உதவ 110 இடங்களில் மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த 2 ஆம் கட்ட கலந்தாய்வு இன்று முதல் ஆகஸ்டு 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் செப்.3ஆம் தேதி வரை 3வது கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டில் 430 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.56 லட்சத்திற்கும் அதிகமான இடங்களில் சேர 1.78 லட்சம் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர்.