ராகுல் காந்தியின் 2ஆம் கட்ட நடைபயணம்…. குஜராத் முதல் மேகாலயா வரை.!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரளா மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2023 ஜனவரி மாதம் வரையில் இந்திய ஒற்றுமை யாத்திரை எனும் பெயரில் நடைபயணம் மேற்கொண்டார்.
அதில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 4 ஆயிரம் கிமீ தூரம் வரையில் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார். அதேபோல அடுத்த கட்டமாக தனது நடைபயணத்தை துவங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
தற்போது ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடை பயணம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டாம் கட்ட நடை பயணமானது குஜராத் மாநிலம் முதல் மேகாலயா மாநிலம் வரை மேற்கிலிருந்து கிழக்காக நடை பயணம் மேற்கொள்ள உள்ளார் என காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோலே கூறியுள்ளார்.
அவர் மும்பையில் மேலும் கூறுகையில், ராகுல் காந்தி இரண்டாம் கட்டமாக நடைபயணத்தை குஜராத்தில் தொடங்க உள்ளார். இந்த நடை பயணம் மேகலயா மாநிலத்தில் முடிவடைய உள்ளது. மகாராஷ்டிராவிலும் இந்த நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். நடை பயணம் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நானா படோலே தெரிவித்தார்.