2014 முதல் 2023 வரை! ரூ.14.56 லட்சம் கோடி வங்கி கடன் தள்ளுபடி – மத்திய அரசு தகவல்
நாட்டில் 2014 முதல் 2023 ஆண்டு வரை பொதுத்துறை வங்கிகளால் மொத்தம் ரூ.14.5 லட்சம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்பி கனிமொழி கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத் பதில் அளித்தார்.
திமுக எம்பி கனிமொழி மக்களவையில் எழுத்துபூர்வமான சில கேள்விகளை எழுப்பினார். அதில், 2014 முதல் ஆண்டுவாரியாக தள்ளுபடி செய்யப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் தொகை தொடர்பான விவரங்கள் என்ன?, அவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டு பின் மீட்கப்பட்ட கார்ப்பரேட் கடன்களின் விவரங்கள் என்ன? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்தக் கேள்விகளுக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார். அவரது பதிலில், 2014-15-ம் நிதியாண்டில் பெரு நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கு ரிட்டர்ன் ஆஃப் செய்யப்பட்ட கடன் தொகை ரூ.18,178 கோடி. அதே நிதியாண்டில் மொத்த தள்ளுபடி கடன் தொகை ரூ.58,786 கோடி என தெரிவித்துள்ளார்.
தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை விவரம்:
- 2015-16 நிதியாண்டில் ரூ.70,413 கோடி
- 2016-17 நிதியாண்டில் ரூ.1,08,373 கோடி
- 2017-18 நிதியாண்டில் ரூ.1,61,328 கோடி
- 2018-19 நிதியாண்டில் ரூ.2,36,265 கோடி
- 2019-20 நிதியாண்டில் ரூ.2,34,170 கோடி
- 2020-21 நிதியாண்டில் ரூ.2,02,781 கோடி
- 2021-22 நிதியாண்டில் ரூ.1,74,966 கோடி
- 2022-23 நிதியாண்டில் ரூ.2,09,144 கோடி
எனவே, 2014 முதல் 2023 ஆண்டு வரை மொத்தம் ரூ.14,56,226 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், பெரு நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ.7,40,968 கோடியாகும்.
இதில், SCB எனப்படும் பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள் 2014 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2023 மார்ச் வரை மொத்தம் ரூ.2,04,668 கோடி மதிப்புக்கு தள்ளுபடி கடன்களை மீட்டுள்ளது என்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து மீட்ட தொகையும் இதில் அடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், எந்தெந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எந்தெந்த வங்கிகள் எவ்வளவு கடன் தொகை தள்ளுபடி (ரிட்டேன் ஆஃப்) செய்திருக்கின்றன என்ற விவரம் நிதித்துறை இணையமைச்சரின் பதிலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.