#BREAKING: புதிய கட்டணம் உயர்வு – தமிழக அரசு விளக்கம்!

registration fee hike

உயர்த்தப்பட்ட பத்திரப்பதிவு கட்டணம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுவதற்கு முன்பாக பதிவு செய்வோருக்கு மட்டுமே பொருந்தும் என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட விரும்பும் கட்டுமான நிறுவனத்தினர் முதலில் இடத்தை விலைக்கு வாங்கி அங்கே அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்கு திட்டமிட்டு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க முன்வருவோருடன் கட்டுமான ஒப்பந்தம் செய்து கொள்வது வழக்கம்.

இவ்வாறு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க முன்வருபவர்களின் பெயர்களில் ஆவணங்களைப் பதிவு செய்ய பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு வரும்போது மேற்படி நிலத்தின் பிரிபடாத பாக மனைக்கான விக்கிரைய ஆவணம் தனியாகவும், கட்டுமான ஒப்பந்த ஆவணம் தனியாகவும் பதிவு செய்யப்படுகிறது. பிரிபடாத பாக மனையின் விக்கிரைய ஆவணத்திற்கு தற்போது நடைமுறையிலுள்ள அட்டவணைப்படி மனையின் சந்தை வழிகாட்டி மதிப்பிற்கு 7% முத்திரைத் தீர்வையும் 2% பதிவுக்கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோருக்கும் கட்டுமான நிறுவனத்தார்க்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளும் கட்டுமான ஒப்பந்த ஆவணத்திற்கு அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான விலைக்கு 1% முத்திரைத் தீர்வையும் 1% பதிவுக்கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த பதிவுக்கட்டணம் மட்டும் 10.07.2023 முதல் 2% உயர்த்தப்பட்டு கட்டுமான விலைக்கு 1% முத்திரைத் தீர்வையும் 3% பதிவுக்கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதாவது, 1% ஆக இருந்த பத்திரப்பதிவு கட்டணம் 10.07.2023 முதல் 3% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையானது அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதற்கு முன்பாக பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு மட்டுமே பொருந்தும். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் உயர்த்தப்படவில்லை. சொந்த வீடு வாங்குவோருக்கு பதிவு கட்டண உயர்வு என பரப்பப்படும் தகவல்கள் உண்மைக்கு புறமானது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. 2012 முதல் 2020-ஆம் ஆண்டு வரை இருந்த அதே நடைமுறை தற்போதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முழுவதுமாக கட்டி முடித்த அடுக்குமாடி குடியிருப்பை கட்டுமான கிரைய ஆவணமாகவே பதிவு செய்ய வேண்டும்.  நிறுவனங்களிடம் இருந்து கிரையமாக வாங்காமல் கட்டுமான ஒப்பந்தம் மட்டுமே செய்தால் பாதிப்பு ஏற்படலாம். கட்டுமான ஒப்பந்தமாக மட்டும் பதிவு செய்தால் குடியிருப்பை மறு கிரையம் செய்வதில் பிரச்சனை ஏற்படலாம் என கூறி, கட்டுமான ஒப்பந்தம் செய்து குடியிருப்பை வாங்க உத்தேசிக்கும் மக்களுக்கு அதே நடைமுறை பின்பற்றப்படும் என பத்திரப்பதிவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்