பட்டியலின் மக்களின் பாதுகாவலர் என திமுகவினர் வாய்ஜாலம் – இபிஎஸ் கண்டனம்

Edappadi Palanisamy

பட்டியலின் மக்களின் பாதுகாவலர் என திமுக ஆட்சியாளர்கள் வாய்ஜாலம் காண்பிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்” என்று சொல்வார்கள். இந்த திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் அவிழ்த்துக் கொட்டும் புளுகு மூட்டைகளின் ஆயுள் 8 நிமிடம்கூட இருப்பதில்லை.

பொய்யும், புரட்டும் சொல்லி நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, பின்புற வாசல் வழியாக ஆட்சிக்கு வந்த திமுக அரசின் 27 மாத ஆட்சிக் காலத்தில் மக்கள் சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். ஓட்டுக்காக நாங்கள் சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள், சமூக நீதியைக் காப்பதே எங்கள் உயிர் மூச்சு, ஆதிதிராவிட மக்களின் சம்பந்தி நாங்கள் என்றெல்லாம் வாய் ஜாலம் காட்டும் பம்மாத்து பேர்வழி ஆட்சியாளர்களின் வெகுஜன விரோத செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, தமிழகத்தை நிலைகுலையச் செய்துள்ளது.

இந்த மக்கள் விரோத ஆட்சியில் தலை முதல் கால்வரை சுயநல நோய் புரையோடிப்போய் சமுதாயத்தை சீரழித்து வருவது கண்கூடாகத் தெரிகிறது. தென்காசி ஆறுமுகப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்கவில்லை. மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் வழங்குவதில் கூட திமுக அரசு பாரபட்சம் காட்டுகிறது. பட்டியலின மக்களின் பாதுகாவலர் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் விடியா திமுக ஆட்சியில், பட்டியலின மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கெனவே, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் தமிழகமே தலைகுனியும் வகையில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மலம் கலந்த நிகழ்வில், குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறேன் என்று நாடகமாடி வரும் நிலையில், தற்போது, ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் காலனிக்கே குடிநீர் வழங்காமல் தடுக்கும் திமுக-வினரின் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு கொடுமைகள் தொடர்ந்தால் அதிமுக வேடிக்கை பார்க்காது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்