மணிப்பூர் வன்முறை – ஆய்வு மேற்கொள்ள 3 நீதிபதிகள் கொண்ட குழு!
மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, மணிப்பூர் வன்முறை தொடர்பான விசாரணை, வீடியோ விவகாரம், இழப்பீடு, மறு குடியமர்வு போன்றவற்றை ஆய்வு செய்யவும், விசாரணை நடத்தவும் 3 ஓய்வுபெற்ற பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
அதன்படி, நீதிபதி கீதா மிட்டல் தலைமையில், நீதிபதிகள் ஷாலினி ஜோஷி, ஆஷா மேனன் ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்ட்டுள்ளது. மணிப்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு, மறுவாழ்வு மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து 3 நீதிபதிகள் கொண்ட குழு கையாளும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
வன்முறை வழக்குகளை விசாரிக்க 42 சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலத்தை சேர்ந்த டி.ஐ.ஜி. நிலை அதிகாரிகள் சிறப்பு விசாரணையை கண்காணிப்பார்கள் எனவும் அறிவித்துள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் கூறுகையில், மணிப்பூர் பாலியல் வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ குழுவில் வேறு மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற வேண்டும்.
சிபிஐ விசாரணையை ஐபிஎஸ் அதிகாரி கண்காணிக்க வேண்டும். மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளன, சிபிஐக்கு மாற்றப்படாத வழக்குகளை 42 எஸ்ஐடிகள் விசாரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனிடையே, உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மணிப்பூர் டிஜிபி இன்று நேரில் ஆஜரானார். ஏற்கனவே, மணிப்பூர் விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த உச்சநீதிமன்றம் டிஜிபியை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.