கலாஷேத்ரா விவகாரம்: ஹரிபத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க விசாரணைக் குழு பரிந்துரை..!
சென்னை அடையாறில் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும் ருக்மணிதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்கள் ஹரி பத்மன், ஸ்ரீநாத், சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன் உள்ளிட்ட 4 ஆசிரியர்கள் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக மாணவிகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதன்பின், மாணவிகள் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத காரணத்தால், மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் மாணவர்கள் அமைப்பினர் தெரிவித்தனர்.
பாலியல் புகார் தொடர்பான மாணவிகளின் இந்த போராட்டம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, மகளிர் ஆணையம் பரிந்துரை பெயரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவிகள் கூறிய பாலியல் புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
இதன்பிறகு கல்லூரி மாணவிகள் அளித்த புகாரின் பெயரில் பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார். இந்த பாலியல் புகார் தொடர்பாக அங்கு பயிலும் மாணவிகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றனர்.
இந்த வாக்குமூலத்தையைடுத்து, சென்னை சைதைபேட்டை நீதிமன்றத்தில் மாணவிகளிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் 250 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர். இதன்பிறகு நிபந்தனையின் பெயரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அதைப்பிறகு, கல்லூரி தரப்பில் இந்த சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கண்ணன் தலைமையில், டிஜிபி லெத்திகா சரண் மற்றும் டாக்டர் ஷோபா வர்த்தமன் ஆகியோர், அடங்கிய நான்கு பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான விசாணைக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் ஹரிபத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் மிகவும் முக்கியமான தகவல்கள் இருப்பதால், அது தனிநபரின் தனியுரிமையை ஆக்கிரமித்துவிடும் என்பதால், அறிக்கையின் அம்சங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என்றும் கலாஷேத்ரா தலைவர் ராமதுரைக்கு விசாரணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் நிர்வாக அமைப்பில் பின்பற்றக்கூடிய விதிமுறைகளை தற்போதைய கால கட்டத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கவும், மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் விசாரணைக்குழு பரிந்துரைத்துள்ளது.