தண்டனை நிறுத்தி வைப்பு மட்டுமே! விடுதலை அல்ல – மத்திய அமைச்சர்
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. சூரத் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால், ராகுல் காந்திக்கு மீண்டும் வயநாடு மக்களவை எம்பி பதவியும் வழங்கி மக்களவை செயலகம் அறிவித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து 134 நாட்களுக்கு பிறகு ராகுல் காந்தி இன்று நாடாளுமன்ற மக்களவையில் பங்கேற்றுள்ளார். ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி வழங்கப்பட்டதால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீதான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர, அவர் விடுதலை செய்யப்படவில்லை என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ராகுல் காந்தி விடுதலை செய்யப்பட்டதாக கொண்டாடுவது துரதிர்ஷ்டமானது, ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாகும் என நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.