பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீடு வழங்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை..! மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்
பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனைகள் அல்லது மலிவு விலையில் வீடுகள் வழங்குவதற்கு குறிப்பிட்ட திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பத்திரிகையாளர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்விஎன் சோமு கேள்வி எழுப்பினார். அவர் அங்கீகாரம் பெறாத பத்திரிக்கையாளர்களை நலத்திட்டங்களில் சேர்க்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா என்று கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த அனுராக் தாக்கூர், பத்திரிகை தகவல் பணியகம் மற்றும் மாநில/யூனியன் பிரதேச அரசுகளின் அங்கீகாரம் பெற்ற பத்திரிக்கையாளர்கள் மற்றும் அங்கீகாரம் பெறாத பத்திரிகையாளர்கள் இருவரும் பத்திரிக்கையாளர் நலத்திட்டத்தின் கீழ் உள்ளவர்கள் என்று கூறினார்.
இதன்பின், பத்திரிகையாளர்கள் அல்லது அவர்களது குடும்பங்களுக்கு நிதியுதவி செய்வது குறித்து கனிமொழி எழுப்பிய கேள்விக்கு, இறப்பு, ஊனம், சிகிச்சை ஆகியவற்றின் காரணமாக மிகவும் கஷ்டப்படும் பத்திரிகையாளர்கள் அல்லது அவர்களது குடும்பங்களுக்கு பத்திரிகையாளர்களுக்கான நலத்திட்டங்களின் கீழ் அவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது என்று அனுராக் தாக்கூர் கூறினார்.