மடிக்கணினி, டேப்லெட் இறக்குமதிக்கு தடை..! அக்டோபர் 31ம் தேதி வரை ஒத்திவைப்பு..!
மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் கணினிகள் மற்றும் பிற தொடர்புடைய பொருட்களின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை அக்டோபர் 31ம் தேதி வரை சுமார் மூன்று மாதங்களுக்கு மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி (வியாழன்) அன்று மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் கணினிகள் ஆகியவற்றிக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.
அந்த அறிவிப்பில், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், ஆல்-இன்-ஒன் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் எச்எஸ்என் 8741-ன் கீழ் வரும் சர்வர்கள் ஆகியவற்றின் இறக்குமதி புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்ததோடு, தடைசெய்யப்பட்ட இறக்குமதிகளுக்கான சரியான உரிமத்தை பெற்றுக்கொண்டால் அவற்றை இறக்குமதி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், வெளிநாட்டில் பழுதுபார்க்கப்பட்ட பொருட்களை மீண்டும் இறக்குமதி செய்யும்போது, தடைசெய்யப்பட்ட இறக்குமதிக்கான உரிமம் பழுதுபார்ப்பதற்கும் பொருட்களை திரும்பப் பெறுவதற்கும் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்பொழுது
இந்த சாதனங்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம், வெளிநாட்டுச் சந்தைகளை நம்பியிருப்பதைக் குறைத்து, உள்ளூர் உற்பத்தித் திறன்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் அக்டோபர் 31ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த நிறுவனங்கள் நவம்பர் 1 முதல் இந்த சாதனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கத்திடம் இருந்து உரிமம் பெற வேண்டும். அதுவரை, தடைசெய்யப்பட்ட இறக்குமதிக்கான உரிமம் இல்லாமல், வெளிநாட்டில் பழுதுபார்க்கப்பட்ட பொருட்களை மீண்டும் இறக்குமதி செய்யலாம் என வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) தெரிவித்துள்ளது.