Haryana Riots : பூஜைக்கான வாள்.. உரிமம் உள்ள துப்பாக்கிகள்.! இந்து அமைப்பை சேர்ந்த பஜிரங்கி தகவல்.!
ஹரியானா மாநிலம் நுஹ் மாவட்டத்தில் கடந்த திங்கள் கிழமை விஸ்வ ஹிந்து பரிஷத் இந்து அமைப்பினர் நடத்திய யாத்திரையின் போது ஒரு பிரிவினர் அவர்களை தடுத்ததால் அங்கு இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு ஊர்காவல் படை காவலர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்னர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக ஹரியானா மாநிலம் மட்டுமின்றி டெல்லியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட விஸ்வ ஹிந்து பரிஷத் இந்து அமைப்பின் பசுக்காவலர் பிட்டு பஜ்ரங்கி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அதில், எங்கள் ஊர்வலத்தில் வந்தவர்களில் சிலர் வாள் வைத்திருந்தனர். ஆனால் அவை வழிபாட்டிற்காக கொண்டுவரப்பட்ட வாள் என்று கூறினார்.
மேலும், எங்கள் ஊர்வலத்தில் வந்தவர்கள் சிலரிடம் துப்பாக்கி இருந்தது. ஆனால் அவை தாக்குதல்களுக்காக கொண்டுவரப்படவில்லை. அவர்களின் உரிய உரிமம் உள்ளது. நாங்கள், நாங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் பேரணியில் பங்கேற்றோம். அப்படி இருக்கையில் நாங்கள் எப்படி யாரையும் தாக்குவோம்? என அவர் கூறினார்.
இந்த பேரணியானது ஒவ்வொரு ஆண்டும் அமைதியாக நடத்தப்படுகிறது. கோயிலில் வழிபாடு முடிந்து பூஜை நடைபெற்று வந்தது.பிறகு நாங்கள் திரும்பப் புறப்பட்டபோது தான் எதிரே இருந்த பேருந்துகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதைக் கண்டோம். பின்னர் பெண்கள் , குழந்தைகளை பாதுகாக்க நாங்கள் அனைவரும் மீண்டும் கோயிலுக்குச் சென்றோம். அந்தசமயம் எங்களுக்கு பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலை தான் அதிகமாக இருந்தது. என்று பிட்டு பஜிரங் கூறினார்.
மேலும், பேரணிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தனக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும், வன்முறைக்குப் பிறகு நான் கொல்லப்படாமல் எப்படி தப்பித்தேன் என சிலர் வருத்தப்படுகிறார்கள் என்றும், தனக்கு தற்போதும் அச்சுறுத்தல்கள் வருகின்றன என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.