மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். பிரதமர் மோடி மாநிலங்களவைக்கு வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் முழக்கமிட்டு வெளிநடப்பு செய்தனர். மாநிலங்களவையில் 6 மணி முதல் 8 மணி வரை மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இத்தனிடையே, நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் வன்முறை தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இரு அவைகளும் சரிவர நடைபெறாமல் முடங்கியுள்ளது.
அதன்படி, 11வது நாளான இன்று மக்களவை தொடங்கிய சில மணி நேரத்திலேயே மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை இன்று பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், எதிர்க்கட்சி எம்பிக்கள் கண்ணியமாக நடந்துகொள்ளும் வரை மக்களவைக்கு வரமாட்டேன் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், மணிப்பூர் கொடூரம் பற்றி பிரதமர் விளக்கம் அளிக்க வராததை கண்டித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர.