மேகதாது அணை கட்ட 2 கி.மீ தூரத்திற்கான ஆய்வு நிறைவு! 60 நாளில் கணக்கெடுப்பு முடியும் என தகவல்!
மேகதாவில் அணை கட்ட வனப்பகுதியில் 2 கி.மீ தூரத்திற்கான ஆய்வை கர்நாடகா அரசு நிறைவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வானிலை சாதகமாக இருந்தால் 60 நாளில் கணக்கெடுப்பு பணி முடியும் என கர்நாடகா அதிகாரிகள் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கர்நாடகா – தமிழக இடையே எல்லையை குறிக்க 20 மீட்டருக்கு ஒரு மர துண்டுகளை கர்நாடக வனத்துறை நட்டு வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேகதாது அணை கட்ட தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் வனப்பகுதியில் கர்நாடக ஆய்வு மேற்கொண்டுள்ளது என கூறப்படுகிறது. இதனிடையே, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஆகஸ்ட் 11ம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. கர்நாடகா தர வேண்டிய நீரை திறந்து விடாததால், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை கூட்ட, தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்த நிலையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.