மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என குடியரசு தலைவரிடம் வலியுறுத்தினோம் – எம்.பி.திருச்சி சிவா
மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் , கூட்டாக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர். அதன்பின் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய திருச்சி சிவா, மணிப்பூரில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை. மணிப்பூர் மக்களிடம் கோரிக்கைகளை கேட்டு அதை அறிக்கையாக குடியரசுத் தலைவரிடம் அளித்தோம். இது தொடர்பாக அறிக்கையை பெற்று கொண்டு, பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல வேண்டும். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என குடியரசு தலைவரிடம் வலியுறுத்தினோம். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் சந்திக்க வேண்டும். மணிப்பூர் கலவரத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.