மணிப்பூர் விவகாரம் : குடியரசு தலைவரை நேரில் சந்தித்த எதிர்க்கட்சி எம்பிக்கள்.!
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் இரு பிரிவினர்கள் இடையே ஏற்பட்ட வன்முறை இன்னும் முழுதாக ஓய்ந்தபாடில்லை. இன்னும் அங்குள்ள மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பலாம் இருக்கின்றனர். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்காமல் இருந்த காரணத்தால் , மத்திய அரசு மீது எதிர்க்கட்சியினர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்து உள்ளனர். இந்த தீர்மானம் மீதான விவாதம் வரும் 8ஆம் தேதி துவங்க உள்ளது. 10ஆம் தேதி பிரதமர் மோடி விளக்கம் அளிக்க உள்ளார். அன்றே வாக்கெடுப்பும் நடைபெறுகிறது.
இதற்கிடையில் ஏற்கனவே எதிர்க்கட்சி எம்பிக்கள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அங்குள்ள மக்களின் நிலை அறிய கடந்த வாரம் மணிப்பூர் சென்று இருந்தனர். அங்குள்ள கள நிலவரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், இன்று காலை 11.30 மணி அளவில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் , கூட்டாக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, மணிப்பூரில் இயல்பு நிலை திரும்ப உடனடி நடவடிக்கை தேவை என்றும், அதற்கான கோரிக்கை மனுவையும் குடியரசு தலைவரிடம் அளித்தனர்.
இந்த சந்திப்பில், காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற எம்பிக்கள் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பானது டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது.