எஸ்பி வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கு – ரத்து செய்ய மறுப்பு!
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கில் நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. எஸ்பி வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கில் ஆறு வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் 5 நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. இறுதி விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், வேலுமணி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதால் தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி நிறுவனங்கள் மனு அளித்திருந்தது.
எஸ்பி வேலுமணி பொது ஊழியர் என்பதால் அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என நிறுவனங்கள் மனுவில் தெரிவித்திருந்தது. 5 நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, வேலுமணி டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரும் 5 நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தது சென்னை உயர்நீதிமன்றம்.