200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி… வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்ற இந்தியா.!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டெஸ்ட் தொடர், ஒருநாள் கிரிக்கெட் தொடர், டி20 தொடர் என பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் விளையாட இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. ஏற்கனவே ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 என வென்றிருந்தது.
இதனை தொடர்ந்து நடந்து முடிந்த 2 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. நேற்று இறுதி போட்டியை யார் வென்று தொடரை கைப்பற்றுவார் என ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது.
நேற்று இந்திய நேரப்படி பிரையன் லாரா மைதானத்தில் இரவு 7.30க்கு துவங்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹர்டிக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி இந்த போட்டியில் களமிறங்கியது.
இதில் முதலில் ஆடிய இஷான் கிஷான் , சுப்மன் கில் 77, 84 ரன்கள் விளாசி நல்ல துவக்கத்தை கொடுத்தனர், அடுத்து ருதுராஜ் 8 ரன்னில் ஏமாற்றம் அளித்தாலும், சஞ்சு சாம்சன் 51 ரன்கள் அடித்து அணியின் ரன் வேகம் குறையாமல் பார்த்துக்கொண்டார். கேப்டன் பாண்டியா 70 ரன்களும், சூரியகுமார் யாதவ் 35 ரன்களும் அடித்து இருந்தனர். 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்து இருந்தது இந்திய அணி.
50 ஓவரில் 352ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பம் முதலே சறுக்கலை சந்தித்தது. பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகவே, ஆலிக் ஆத்ன்ஸ் மட்டும் 32 ரன்கள் எடுத்து இருந்தார். கேப்டன் ஷாய் ஹோப் 5 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.
அதிகபட்சமாக குடகேஷ் மோதி 39 ரன்களும், அல்ஜாரி ஜோசப் 26 ரன்களும், யானிக் கரியா 19 ரன்களும் எடுத்தனர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 35.3 ஓவரிகளில் 10 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. இதன் மூலம் இந்திய அணி 200 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என்ற வெற்றி கணக்குடன் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரையும் கைப்பற்றியது.