கிரேன் விழுந்து விபத்து.! உயிரிழந்த 17 பேரில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்..!
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் சம்ருத்தி பகுதியில் விரைவுச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தபோது கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானது. விரைவுச்சாலை அமைக்கும் மூன்றாம் கட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சமயத்தில் நேற்று நள்ளிரவு பணி நடைபெற்று இருக்கும்போது 12 மணி அளவில், திடீரென கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் சரிந்து அங்கு பணியில் ஈடுப்பட்டு இருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இந்த விபத்தில், இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த 17 பேரில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உயிரிழந்த 2 தமிழர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் எனக் கூறப்படுகிறது.
மேலும், அவர்கள் இருவரின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் பிஎம் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.