ஹரியானாவில் மத ஊர்வலத்தில் வன்முறை.! 2 காவலர்கள் உயிரிழப்பு.! 7 மாவட்டங்களில் 144 தடை….
பாஜக ஆட்சி நடைபெறும் ஹரியானா மாநிலத்தில் நுஹ் மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் எனும் இந்து அமைப்பினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த பேரணி குருகிராம் – அல்வார் தேசிய நெடுஞ்சாலை வந்த போது திடீரென அங்கு ஒரு குழு வந்ததாகவும், அப்போதும் இரு தரப்பினரிடையே வன்முறை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அங்கு இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கல்வீச்சு சம்பவங்கள், வாகனங்களுக்கு தீ வைப்பது என பெரும் பதற்றம் அந்த பகுதியில் உண்டானது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் களமிறங்கினார். இதனால் அப்பகுதியில் 144 தடை போடப்பட்டிருந்தது.
கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றனர். இருந்தும் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஊர்க்காவலர் படையினர் காயமடைந்தனர். மேலும் இரண்டு ஊர்க்காவல் படை காவலர்கள் கலவரத்தில் உயிரிழந்து விட்டனர் என தகவல் வெளியாகியுள்ளது.
நுஹ் மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்ட காரணத்தால் சுற்றுவட்டாரத்தில் 7 மாவட்டங்களில் 144 தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நாளை வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.