புழல் சிறை-2ல் மேலும் 500 கைதிகளை அடைப்பதற்கு வசதிகள் – எடப்பாடி பழனிசாமி தகவல்..!
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
சிறைத் துறை குறித்த பின்வரும் அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் அறிவிக்கின்றேன்.
சென்னை புழல் மத்திய சிறை2ல் உள்ள இட நெருக்கடியை கருத்தில் கொண்டு, 500 சிறைவாசிகளை கூடுதலாக அனுமதித்திடும் வகையில், 15 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
புழல் மத்திய சிறை 2, வேலூர், கடலூர், திருச்சி, கோயம்புத்தூர், சேலம், மதுரை மற்றும் பாளையங்கோட்டை ஆகிய சிறைகளில் பணி புரிந்து வரும் உதவி சிறை அலுவலர்களுக்கு 50 குடியிருப்புகள், 10 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
சிறைகளுக்குள் சிறைவாசிகள் செல்லிடத் தொலைபேசியை உபயோகப்படுத்துவதை தடுத்திடும் பொருட்டு, ஏற்கனவே 9 மத்திய சிறைகளில் செல்லிடத் தொலைபேசியை செயலிழக்கும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, சென்னை புழல் மத்தியசிறை1 மற்றும் 2, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை மற்றும் 5 பெண்கள் தனிச்சிறைகளில் நடப்பாண்டில் 10 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செல்லிடத் தொலைபேசியை செயலிழக்கும் கருவிகள் பொருத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை சார்ந்த பின்வரும் அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் அறிவிக்கின்றேன்.
ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்க தமிழ்நாடு அரசால் காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டன. மதுரையில் செயல்படும் அன்னை சத்தியா அரசு குழந்தைகள் காப்பகம், 1986-ம் ஆண்டிலிருந்து மாநகராட்சி கட்டடத்தில் இயங்கி வருகின்றது.
தற்போது இக்கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், ஒரு புதிய கட்டடம், துயிற்கூடம், குழந்தைகள் நலக் குழு அறை, வகுப்பறை, தொழிற் பயிற்சி கூடம் மற்றும் உணவுக் கூடம் ஆகியவை 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளியில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் ஒன்று 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 46 ஆயிரத்து 397 அங்கன்வாடி மையங்கள் சொந்த கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன.
நடப்பாண்டில் 860 அங்கன்வாடி மையக் கட்டடங்களில் உள்ள சிறிய மற்றும் பெரிய வகையிலான பழுதுகளை நீக்கி, சீர்படுத்துவதற்காக தலா 2 லட்சம் ரூபாய் வீதம், 17 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அவர்களின் தன்னம்பிக்கையை வளரச் செய்யவும், சம வாய்ப்புகளை ஏற்படுத்தித்தரவும், அவர்களுக்கென பல கொள்கைகளை வகுத்தும், திட்டங்களைத் தீட்டியும், அம்மா வழியில் அம்மாவின் அரசு செயல் பட்டு வருகின்றது.
மனவளர்ச்சி குன்றியோர், பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்காக செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் மதிப்பூதியம் 10,000 ரூபாயிலிருந்து 14,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
இதன் மூலம் 1,129 சிறப்பாசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பயன் பெறுவர். இதனால், அரசுக்கு ஆண்டொன்றிற்கு 5 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு சுயவேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பொருள் விற்பனை மையம் அமைக்க, அவர்கள் ஆவின் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய முன்வைப்பு நிதி 25,000 ரூபாய் மானியமாக வழங்கப்படும். முதற் கட்டமாக, 100 நபர்களுக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் இத்திட்டம் செயல் படுத்தப்படும்.
மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் செயல்படும் 301 சிறப்புப் பள்ளிகள் மற்றும் இல்லங்கள் மூலம் 11 ஆயிரத்து 948 மாற்றுத் திறனாளிகள் பயன் பெறுகின்றனர்.
அவர்களுக்கு தற்போது மாதமொன்றிற்கு வழங்கப்பட்டு வரும் உணவூட்டு மானியம் 650 ரூபாயிலிருந்து 900 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதனால், அரசுக்கு ஆண்டொன்றுக்கு 3 கோடியே 15 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.