மணிப்பூரில் அமைதி திரும்பி விட்டது என்று கூறுவது பொய்..! கனிமொழி எம்.பி பேட்டி..!

Kanimozhi

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக இரு பிரிவினர்கள் இடையே வன்முறை வெடித்து, 100க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தனர். மேலும், இரண்டு பெண்களை ஒரு கொடூர கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் அழைத்துச்சென்ற வீடியோவும் வெளியாகி, உலகெங்கிலும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதனால், மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினர்கள் இடையே ஏற்பட்ட கலவரம் தொடர்பாக அங்குள்ள மக்களை நேரில் சந்திக்க காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட இந்தியா (I.N.D.I.A.) கூட்டணி கட்சி தலைவர்கள் இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்ளனர்.

அங்கு நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களின் நிலை குறித்து கேட்டறிந்தறிந்தனர். இன்று இரண்டாவது நாளான மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உகேவை நேரில் சென்று சந்தித்து, மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மீண்டும் டெல்லி வந்தடைந்துள்ளனர்.

இதன்பிறகு, திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், இரண்டு சமூகத்தினருக்கும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை. முதலமைச்சரோ அமைச்சர்களோ மக்களை சென்று சந்திக்காத ஒரு சூழ்நிலையில், பல இடங்களில் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட அந்த இரண்டு பெண்களையும் பெண் எம்பிக்கள் மட்டுமே சந்தித்தனர். அவர்கள் மனரீதியாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பெண்களும் தங்களுக்கு நியாயம் நீதி கிடைக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயம் எங்களை காப்பாற்ற வேண்டிய காவல்துறையே எங்களை கொண்டு போய் அந்த வன்முறை கும்பலிடம் ஒப்படைத்தது என வருத்தத்துடன் தெரிவித்தனர். தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என மணிப்பூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அங்கு அமைதி இருப்பது போல ஒரு சூழல் நிலவுகிறதே தவிர உண்மையில் அமைதி திரும்பவில்லை. பாதுகாப்பு வேண்டுமென்று மணிப்பூர் மக்கள் இன்றும் போராடி வருகின்றனர். எனவே, இதனால் நிச்சயமாக அங்கு அமைதி திரும்பி விட்டது என்று கூறுவது பொய் என திமுக எம்.பி.கனிமொழி கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்