பட்டாசு கிடங்கு வெடி விபத்து..! பலியானோரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து ஏற்பட்ட பகுதியில் இருக்கும் உணவகம் சேதமடைந்துள்ளதாவும், அதில் சிலர் சிக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வட்டம், பழையபேட்டை நகரம், நேதாஜி ரோடு, போகனப்பள்ளி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசுக் கடையில் இன்று (29-7-2023) காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்த மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்களை அனுப்பிவைத்துள்ளேன். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குச் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/741q6unpE7
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 29, 2023