பிரம்மோஸ் ஏவுகணை வடிவமைப்பை நேரில் காண்பிப்பேன்.! பாகிஸ்தான் உளவாளியிடம் டிஆர்டிஓ விஞ்ஞானி..
பிரம்மோஸ் ஏவுகணை வடிவமைப்பை நேரில் காண்பிப்பதாக பாகிஸ்தான் உளவாளியிடம் டிஆர்டிஓ விஞ்ஞானி கூறியுள்ளார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) உளவு வழக்கில் மகாராஷ்டிராவின் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) நடத்திய விசாரணையில் விஞ்ஞானி பிரதீப் குருல்கர் பிரம்மோஸ் ஏவுகணைத் திட்டம் குறித்த மிகவும் ரகசியமான அறிக்கையை பாகிஸ்தானிய உளவாளி பெண் ஒருவரிடம் காட்டப் போவதாக கூறியது தெரியவந்துள்ளது.
டிஆர்டிஓ விஞ்ஞானி பிரதீப் குருல்கர், உளவு பார்த்தல் மற்றும் பெண் பிஐஓவுடன் தவறான தகவல்தொடர்பு தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் மே 3 அன்று ஏடிஎஸ் ஆல் கைது செய்யப்பட்டார். இதன்பிறகு நடந்த விசாரணையில் குருல்கரின் வாட்ஸ்அப் பதிவுகளை ஏடிஎஸ் ஆய்வு செய்தனர்.
அதில், அவர் ஜாரா தாஸ்குப்தா என்ற பாகிஸ்தானிய உளவாளி பெண் ஒருவரிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளது தெரியவந்தது. ஜாரா, குல்கரை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு தன்னை ஒரு மென்பொருள் பொறியாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதன் பிறகு ஆபாசமான செய்திகள், வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலமும் அவருடன் நெருக்கமாகியுள்ளார். இதன்பிறகு, பிரம்மோஸ் ஏவுகணை குறித்து ஜாரா பேசியுள்ளார். அதற்கு பதிலளித்த அவர், அனைத்து பிரம்மோஸ் ஏவுகனை பதிப்புகளின் ஆரம்ப வடிவமைப்பு அறிக்கை என்னிடம் உள்ளது.
இதை வாட்ஸ்அப் மற்றும் ஜிமெயிலில் அனுப்ப முடியாது. எனவே, நேரில் சந்திக்கும் பொழுது அல்லது அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது காண்பிக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில், ஏடிஎஸ் குழுவினர் பாகிஸ்தானிய பெண் உளவாளி எனக் கூறப்படும் ஜாரா தாஸ்குப்தாவைத் தேடி வருகின்றனர்.