சோனியா காந்திக்கு ராகுல் பிரதமராகனும்.. மு.க.ஸ்டாலினிக்கு உதயநிதி முதல்வராகனும்… அமித்ஷா பரபரப்பு பேச்சு.!
சோனியா காந்திக்கு ராகுல் பிரதமராகனும், மு.க.ஸ்டாலினிக்கு உதயநிதி முதல்வராகனும் என்று தான் ஆசை என மத்திய அமைச்சர் அமித்ஷா விமர்சித்து உள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ராமேஸ்வரத்தில் ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரையை துவங்கினார். இந்த துவக்க விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு அண்ணாமலையின் பாதயாத்திரை நிகழ்வை துவங்கி வைத்தார். அந்த விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திமுக அரசு பற்றியும், காங்கிரஸ் கூட்டணி பற்றியும் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். மேலும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் கூறினார்.
அவர் பேசுகையில், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் திட்டங்களை செயல்படுத்துவதற்காக அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்கிறார். பாஜக பொறுப்பேற்ற கடந்த 9 ஆண்டுகளில் ஒவ்வொரு வீடுகளுக்கும் பாஜக அரசின் திட்டங்கள் சென்றுள்ளது. அடுத்த தேர்தலும் பாஜக மகத்தான வெற்றியைப் பெறும். என்று குறிப்பிட்ட அமித்ஷா, தமிழகத்தில் திமுக குடும்ப அரசியல் செய்து வருகிறது என்று விமர்சித்தார்.
காங்கிரஸ் ஆட்சி செய்த பத்தாண்டு காலத்தில் சுமார் 12,000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது என்றும், திமுக என்றாலே 2ஜி ஊழல் தான் மக்களுக்கு நினைவு வருகிறது என்றும் விமர்சித்தார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்தவர்கள் காங்கிரஸ் கட்சிக்காரர்கள். அவர்களது காலகட்டத்தில் தான் தமிழக மீனவர்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தனர். எதிர்க்கட்சியினர் நாட்டை வளர்க்க விரும்பவில்லை. மாறாக அவர்களது குடும்பத்தை வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். குடும்ப கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணி அமைத்தால் அதனால் நாட்டுக்கு எந்த பயனும் இல்லை. அவரவர் வீட்டுக்கு தான் நன்மை என்று இந்தியா கூட்டணி பற்றி தனது விமர்சனத்தை முன் வைத்தார் மத்திய அமைச்சர் அமித்ஷா.
அடுத்ததாக பேசிய அமித்ஷா, சோனியா காந்திக்கு ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக்க வேண்டும், அதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலினை தமிழக முதல்வராக்க வேண்டும். மேலும், லாலு பிரசாத் யாதவிற்க்கு தேஜஸ்வி யாதவையும், மம்தாவுக்கு தனது மருமகனையும், உத்தவ் தாக்கரேவுக்கு அவரது மகனையும் அந்தந்த மாநில முதல்வர்களாக மாற்ற வேண்டும் என முயற்சித்து வருகிறார்கள். ஆனால் நரேந்திர மோடி மட்டுமே இந்தியாவுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்து வருகிறார். திமுக உலகிலேயே ஊழல் அதிகமாக உள்ள அரசாக உள்ளது. தற்போது தமிழகத்தில் ஊழல் நிறைந்த அரசாங்கம் தான் நடக்கிறது என்று தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார் அமித்ஷா.
மேலும், செந்தில் பாலாஜி பற்றி பேசுகையில், உங்களுடைய அமைச்சரவையில் உள்ள செந்தில் பாலாஜி ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். ஆனால், அவர் இன்னும் அமைச்சரவையில் தொடர வைத்துள்ளீர்கள் என்று விமர்சித்த அமித்ஷா, சிறையில் இருப்பவர்கள் அமைச்சராக தொடரக்கூடாது. அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அவரே ராஜினாமா கொடுத்தாலும் ஸ்டாலின் அதனை ஏற்கமாட்டார். அப்படி அவர் வாங்கி விட்டால் திமுகவின் ரகசியங்கள் அனைத்தையும் செந்தில் பாலாஜி சொல்லிவிடுவார் என்று செந்தில் பாலாஜி கைது குறித்தும் அமித்ஷா விமர்சித்தார்.
இறுதியாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு டிவீட் போட்டாலே உங்கள் ஆட்சியில் பூகம்பம் ஏற்படுகிறது. திமுகவினர் செய்த பல கோடி ரூபாய் ஊழல் தற்போது வெளிப்பட்டு இருக்கிறது. ஒரு டிவீட்டிற்கு இங்கு நிலநடுக்கம் ஏற்படுகிறது என்றால், அண்ணாமலை தற்போது பத்தாயிரம் கிலோ மீட்டர் நடக்க போகிறார் என்றால் உங்கள் நிலைமை என்னவாகும் என்று நினைத்து பாருங்கள் என்று தனது உரையில் மத்திய அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டு பேசினார்.